Sunday 28 November, 2010

பருவத்தைக் கொண்டாடு !

இது
மரங்கள் உடைகளின்
நிறம்
மாற்றும் காலம்.
அவசர அவசரமாய்
உடை மாற்றும் காலம்.
பச்சைய நரம்புகளுக்குள்
வர்ணப் பாம்புகள்
நெளிய,
இலைகள் எல்லாம்
வானவில் போர்த்திச் சிரிக்கும்
வர்ணங்களின் மாதம்.
காற்றில் சூரியனின்
வெப்பம் நகர
ஓராயிரம் குளிர்வேகத் தடைகள்
உருவாகும்.
குளிரில் நடுங்கிக் கொண்டே,
வெப்பம் இழந்த வெயிலை
இழுத்துக் கொண்டே,
முகிலிடை ஓடுவான் ஆதவன்.
இலைகளுக்கு இது
குளிர் முத்தக் காலம்.
வெயில் காலம்
மரங்களுக்குச் சீருடை அணிவிக்கிறது,
இப்போது
மரங்கள் திருவிழா
கொண்டாடுகின்றன.
பிரகாசமாய் எரியும்
கடைசித்துளி மெழுகு தான் இது,
இன்னும் சில நாட்கள் தான்,
இலைகள்,
உறவுகளுக்கு விடைகொடுத்து
மர(ண)த்தின் காலடியில்
மண்டியிடும்.
இன்னும் சில நாட்கள் தான்,
இந்தக் குளிரும்
உறைந்து போய்,
மேகத்தை உருக விடாமல் உடைக்கும்.
உடைந்து வீழும்
மேகத் துண்டுகள்,
ஆடைகளைந்த
மரமேனியில் ஆனந்தமாய் கூடுகட்டும்,
வெப்பத்தின் கடைசித் துளிகள்
மரத்தின் மையத்திற்குள் ஓடி
மறைந்து கொள்ள,
பனிவீரர்கள் மட்டும்
ஆட்சியைப் பிடித்து விட்டதாய்
ஊரெங்கும் அறிவிப்பார்கள்.
வெப்பக் குளம் தேடி
தெப்பக் குளம் விட்டு
தவளை மனிதர்கள் தாவுவார்கள்.
தன்னை
அவரசமாய் மிதிக்கும் வாகனங்களைப்
புரட்டி,
தெரியாமல் தீண்டும்
வெற்றுக் கால்களை
விரட்டி,
எங்கும் சில மாதங்கள்
பகிரங்கத் தாக்குதல் நடக்கும்.
அதுவும் சில காலம் தான்,
பதுங்கிய சூரியப் புலி,
மீண்டும் தன்
குகைவிட்டுச் சீறும்
கதிர்களில் வெப்ப வரம்புகள் மீறும்.
அது
குளிர் யானைகளிள்
அகன்ற பாதங்களைக் கீறும்.
மெல்ல மெல்ல,
பனி வீரர் படை பின்வாங்கும்,
மீண்டும் வருவேன் என்னும்
சபதத் துளிகளை
நிற்குமிடத்தில் நிறுத்திவிட்டு.
கிளைகளில் இருக்கும்
பனிக் கூடுகளை
வெப்ப அரிவாள் அறுத்தெறியும்.
சாலைகளை அது
பனியின் கண்ணீர் மொண்டு
கழுவித் துடைக்கும்.
மரங்கள் எல்லாம்,
மீண்டும்
சூரியக் கட்டளைப்படி
சீருடை அணியத் தயாராகும்.
ஆதவன் வந்து
சிம்மாசனத்தில் அமருவான்.
எதுவும் நிரந்தரமாய்
வந்தமராது,
ஆனாலும்
மாற்றங்களை ஏற்கும் வரம் தரப்படும்,
மரங்களுக்கும்
மனிதர்களுக்கும்.

No comments:

Post a Comment